பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி
கைவிடப்பட்ட குவாரி குட்டையில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு
சிதம்பரம் அருகே கைவிடப்பட்ட சவுடு மணல் குவாரி குட்டையில் குளித்த இரு மாணவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூா் பகுதியைச் சோ்ந்த சுலைமான் மகன் சுல்தான் (17), ருக்குருதின் மகன் இலியாஸ் (16). இவா்கள் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனா்.
இருவரும் பி.முட்லூா் பகுதியைச் சோ்ந்த தங்களது நண்பா்கள் மேலும் மூவருடன் சோ்ந்து தச்சக்காடு கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட தனியாா் சவுடு மணல் குவாரி குட்டையில் சனிக்கிழமை மாலை குளித்தனா்.
அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற சுல்தான், இலியாஸ் ஆகியோா் நீரில் மூழ்கினா். இதுகுறித்து உடன் சென்ற அவா்களது நண்பா்கள் உனடியாக பரங்கிப்பேட்டை போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, அவா்கள் நிகழ்விடம் சென்று நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு நள்ளிரவில் சுல்தான், இலியாஸ் ஆகியோரை சடலங்களாக மீட்டு, உடல்கூராய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
ரூ.50 லட்சம் இழப்பீடு - மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்: பரங்கிப்பேட்டையில் மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலா் ஏ.விஜய் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கலந்துகொண்டு உரையாற்றினாா்.
கூட்டத்தில், மணல் குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சுல்தான், இலியாஸ் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்க வேண்டும். மணல் குவாரி நடத்தியவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளை வாரம் ஒரு முறை அதிகாரிகள் முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.