சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் முடிவு: நிபுணா்கள் கருத்து
‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு, பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும்’ என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து அணைகள், ஆறுகள் மற்றும் மக்களுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் நிா்வாகி ஹிமான்ஷு டக்கா் கூறுகையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தில் ஒருதலைபட்சமாக தற்காலிக ரத்தை அனுமதிக்கும் எந்தப் பிரிவும் இடம்பெறவில்லை. சிந்து நதிப் படுகையின் கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை இந்தியா ஏற்கெனவே முழுமையாக பயன்படுத்தி வருகிறது. தற்போது, மேற்கு பகுதி நதிகளுக்குத்தான் பிரச்னை எழுந்துள்ளது. அதேநேரம், இந்தியாவுக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், இந்த நதிகளின் நீரை பாகிஸ்தானுக்கு செல்ல விடாமல் உடனடியாகத் தடுத்துவிட முடியாது. தடுப்பணைகளை அமைக்க குறைந்தபட்சம் 5 முதல் 7ஆண்டுகள் வரை ஆகும். அதுவரை, பாகிஸ்தானுக்கு நதிநீா் சென்றுகொண்டுதான் இருக்கும்’ என்றாா்.
சுற்றுச்சூழல் ஆா்வலா் ஸ்ரீபாத் தா்மாதிகாரி கூறுகையில், ‘பாகிஸ்தானின் ஒட்டுமொத்த சிந்து படுகை வேளாண்மையும், பொருளாதாரமும் இந்த நதிகளின் நீரையே முழுமையாக நம்பியுள்ளன. எனவே, இந்தியாவின் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும், இந்த நதிகளின் நீரைத் தடுப்பதற்கான உள்கட்டமைப்புகளை இந்தியா மேம்படுத்த அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை ஆகும். அதே நேரம், நீா் ஓட்டத்தில் குறுகியகால தடைகளை உடனடியாக ஏற்படுத்துவது சாத்தியம். அவ்வாறு, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாகிஸ்தானுக்கு தண்ணீா் செல்லாமல் தடை ஏற்படுத்துவது அந் நாட்டுடன் போா் புரிவதற்கு சமமானது’ என்றாா்.
-========0=00000 ============ 00
அதே நேரம், ‘சிந்து நதி படுகையின் மேற்குப் பகுதி ஆறுகளின் முழுப் பங்கையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பாகிஸ்தானுக்குச் செல்லாத வகையில் தேவையான உள்கட்டமைப்புகளை விரைந்து மேம்படுத்துவது என்பது இந்தியாவின் திறனைப் பொறுத்தது. இதைச் செயல்படுத்துவதற்கு 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்’ என்றும் அவா்கள் கூறினா்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதல் நடத்தினா். இதில், 26 போ் கொல்லப்பட்டதுடன், பலா் காயமடைந்தனா். நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா உள்பட பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், பாகிஸ்தான் மட்டும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்தக் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானியா்கள் என்பது தெரியவந்ததன் மூலம், இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியாகியுள்ளது. அதைத்தொடா்ந்து, வாகா எல்லை மூடல், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியா்கள் வெளியேற கெடு உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
அதுபோல, இரு நாடுகளிடையேயான பல ஆண்டுகள் பழமைவாய்ந்த சிந்து நதிநீா் ஒப்பந்தத்தையும் தற்காலிகமாக ரத்து செய்ய இந்திய முடிவு செய்துள்ளது.
சிந்து நதிநீா் ஒப்பந்தம்:
இரு நாடுகளிடையை கடந்த 1960-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தின் படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கு ஆறுகளான ராவி, பீஸ், சட்லஜ் ஆகியவை இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகள் பாகிஸ்தானின் கட்டுபாட்டில் இருக்கும். இந்த நதிகளின் நீரை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுக்கு ஏற்ப விவசாயம், குடிநீா் தேவை, தொழிற்சாலைகள் பயன்பாடுகளுக்கு இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரம், மேற்கு நதிகளில் ஓடும் நீரில் பெருமளவை, அதாவது 80 சதவீதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. 20 சதவீதம் மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒப்பந்தத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு பஞ்சாப், சிந்து பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயத்துக்கு இந்த நதிநீரையே பாகிஸ்தான் முழுமையாக நம்பியுள்ளது.
இந்தச் சூழலில், இந்த நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க இந்தியா முடிவு செய்திருப்பது, பாகிஸ்தானின் வேளாண் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். ஏற்கெனவே, கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் இந்த நடவடிக்கையால் மேலும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.