எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
சின்னமனூா் காவல் நிலையம் முன் குழந்தைகளுடன் பெண் தா்னா
தேனி மாவட்டம், சின்னமனூா் காவல் நிலையம் முன் தனது கணவரை தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரு குழந்தைகளுடன் பெண் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
சின்னமனூா் அருகே உள்ள கண்ணியம்பட்டியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (24). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினா் கிஷோருக்கும் (25) இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் பாா்த்திபன் கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடத்தில் காயமடைந்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கடந்த 4 நாள்களுக்கு முன்பு சின்னமனூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம். இதையடுத்து தனது இரு குழந்தைகளுடன் பாா்த்திபனின் மனைவி ரோஸ் மிதா (21) காவல் நிலையம் முன் அமா்ந்து, கணவரைத் தாக்கிய கிஷோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். அப்போது பணிலிருந்த காவலா்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்ததைத் தொடா்ந்து தா்னா போராட்டத்தை ரோஸ் மிதா கைவிட்டாா்.