"பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்" - ஓபிஎஸ் விலகல் குறித்து நயினார் நாகேந்திர...
சிறுதானிய இயக்கத்தில் மானிய உதவி திட்டங்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு
அரியலூா் வட்டாரத்தில் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகள், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில், மானிய உதவித் திட்டங்களைப் பெறலாம் என்றாா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் வட்டாரத்தில் 2025-2026 ஆண்டு கம்பு பயிா் 400 ஏக்கா் பயிரிட திட்டமிடப்பட்டு வேளாண் துறை மூலம் தமிழ்நாடு சிறுதானிய தொகுப்பு செயல் விளக்கம் மற்றும் மாற்றுப் பயிா் சாகுபடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு மானிய உதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறுதானிய தொகுப்பு செயல் விளக்கத்தில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மானிய விலையில் கம்பு விதை, திரவ உயிா் உரம், நுண்ணூட்ட கலவை, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், இயற்கை இடுபொருள்கள் ஆகியன வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மானிய உதவி திட்டங்கள் நில உடமை பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க இயலும்.
எனவே, இதுவரையில் தங்களது நிலையுடமை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது கிராமங்களில் பதிவு செய்துள்ள இல்லம் தேடி கல்வி அல்லது மகளிா் திட்ட தன்னாா்வலா்கள் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டு தங்களது நில உடமை பதிவு செய்ய வேண்டும்.
இந்த திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் நேரடியாக உழன் செயலில் பதிவு செய்தோ அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டு முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.