Parking: "நம்ப முடியாத அங்கீகாரம்" - இயக்குநர் ராம்குமார் நெகிழ்ச்சி
பிரஜ்வல் ரேவண்ணா: பாலியல் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம்; தண்டனை அறிவிப்பு எப்போது?
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதலமைச்சரும் மத்திய அமைச்சருமான ஹெச்.டி. குமாரசாமியின் சகோதரரின் மகனுமான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.க கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஹசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா (2019 - 24 மக்களவை எம்.பி) போட்டியிட்டார்.
பிரதமர் மோடி அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
ஆனால், பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்தது தொடர்பான 2,500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் , தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக அவர் வெளிநாட்டுக்குத் தப்பியோடினார். இருப்பினும், அவரால் பாதிப்புக்குள்ளான பெண்கள் சிலர் தைரியமாக முன்வந்து அவர் மீது புகாரளித்தனர்.
அதன்படி, அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
ஆனாலும் அவர் ஜெர்மனியில் இருந்ததால் போலீஸாரால் அவரைக் கைதுசெய்ய முடியவில்லை.
பின்னர் ஒருவழியாக அவரது தாத்தா தேவகவுடா கூறிய பின்னர் மே 31-ம் தேதி நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
சுமார் 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதேவேளையில், இன்ஸ்பெக்டர் ஷோபா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), விசாரணையில் 123 ஆதாரங்களைச் சேகரித்து, கிட்டத்தட்ட 2,000 பக்கங்களைக் கொண்ட பெரிய குற்றப்பத்திரிகையைச் சமர்ப்பித்தது.
இதன் மீது கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கப்பட்ட நீதிமன்ற விசாரணையில் கடந்த ஏழு மாதங்களில் 23 சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்தது.
மேலும், வீடியோ க்ளிப்புகள், முக்கிய தடய அறிவியல் ஆய்வக அறிக்கைகள், குற்றம் நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் ஆகியவற்றை நீதிமன்றம் மதிப்பாய்வு செய்தது.

இந்த நிலையில் விசாரணையின் முடிவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என இன்று தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை விவகாரங்களை நீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 2) அறிவிக்கும்.
இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருக்கும் இந்தியத் தண்டனைச் சட்டம் 376(2)(k), 376(2)(n), 354(A), 354(B), 354(C), 506, 201 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அதிகபட்சம் ஆயுள்தண்டனை வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.