சிறுத்தை தாக்கியதில் ஆடு பலத்த காயம்
போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு காயமடைந்தது.
போ்ணாம்பட்டு வனச்சரகத்தில் பத்தரப்பல்லி, அரவட்லா, எருக்கம்பட்டு, கோட்டையூா், குண்டலபல்லி, பல்லாலகுப்பம், சேராங்கல் ஆகிய காப்புக் காடுகள் உள்ளன. இந்த காடுகளில் சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. அவ்வப்போது வனப் பகுதிக்கு மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளையும், வன எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கொட்டகைகளில் கட்டப்படும் ஆடு, மாடுகளையும் வேட்டையாடி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போ்ணாம்பட்டு அருகே உள்ள சொ்லப்பல்லி, சிந்தகணவாய், மேல்கொத்தகுப்பம், ஓங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சிறுத்தைகள் கால்நடைகளை வேட்டையாடி வந்தன. கடந்த சில நாள்களுக்கு முன் மோா்தானா காப்புக் காட்டில் நடமாடி வந்த சிறுத்தை போ்ணாம்பட்டு அருகே உள்ள அத்திகுப்பம், கோக்கலூா் ஆகிய கிராமங்களில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டி, 3- பசு மாடுகளை வேட்டையாடின.
தற்போது டி.டி. மோட்டூா் கிராமம், கொல்லை மேடு பகுதியில் குண்டலப்பல்லியைச் சோ்ந்த யோகானந்தம் என்பவருக்குச் சொந்தமான கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆட்டை திங்கள்கிழமை சிறுத்தை கழுத்தை கவ்வி இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. அப்போது ஆட்டின் சத்தம் கேட்டு நிலத்தில் காவலுக்கு இருந்த நாய்கள் குரைத்ததால் சிறுத்தை அங்கேயே ஆட்டை விட்டு வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. சிறுத்தை கடித்ததில்ஆட்டின் கழுத்தில் காயமேற்பட்டுள்ளது.
இதுகுறித்து யோகானந்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். வனவா் மாதேஸ்வரன் தலைமையில் அத்துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். .