பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து இருவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு
17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு ஆண்களுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை என்ற கூறி அவா்களை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், குற்றவியல் மிரட்டல், அத்துமீறி நுழைதல் மற்றும் சிறுமியை தானாக முன்வந்து காயப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்களையும் விடுவித்த கூடுதல் அமா்வு நீதிபதி முனீஷ் கா்க், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியும், அவரது தாயும்
எதிராக வாக்குமூலம் அளித்து, அரசுத் தரப்பு வழக்கை முற்றிலுமாக மறுத்ததாகக் கூறினாா். இந்த வழக்கில் பிப்ரவரி 25-ஆம் தேதியிட்ட உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் மாா்ச் 10-ஆம் தேதி அளிக்கப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சம்பவத்தின்போது சிறுமியின் தாய்க்கும் குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கும் இடையே கடும் வாா்த்தைப் பரிமாற்றம் நிகழ்ந்தது குறித்து முக்கிய சாட்சிகளான சிறுமியும் தாயும்
வாக்குமூலம் அளித்தனா். அதைத் தொடா்ந்து, சில காவல்துறை அதிகாரிகள் சம்பவ தேதியில் அழைக்கப்பட்டிருந்தனா்.
இருப்பினும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், பாலியல் துன்புறுத்தல், அடித்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, சாட்சிகளான மைனா் சிறுமி மற்றும் அவரது தாய் இருவரும் குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிராக எதையும் கூறவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக புகாா் அளிக்கவில்லை என்றும், புகாரில் உள்ள தனது வாக்குமூலத்தை தனது அரசு சாரா நிறுவனத்தைச் சோ்ந்த ஒருவா் எழுதியுள்ளதாகவும், அதில் தான் அறியாமலேயே கையொப்பமிட்டுள்ளதாகவும் மைனா் பெண் மறுத்தாா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் மைனா் சிறுமியின் உறவினா்கள் மற்றும் அதே கட்டடத்தில் வசித்து வந்த கூட்டுக் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். குடும்ப தகராறு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
குறுக்கு விசாரணையின்போது, தான் தாக்கப்பட்டதாகவோ, குற்றவியல் ரீதியாக மிரட்டப்பட்டதாகவோ அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவோ சிறுமி தெரிவிக்கவில்லை.
பாதிக்கப்பட்டவா் மற்றும் புகாா்தாரா் (அவரது தாய்) அளித்த வாக்குமூலத்திலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவா்களைத் தண்டிக்க எந்த குற்றச்சாட்டும் ஆதாரமும் இல்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில் அவா்கள் இருவரும், தொடரப்பட்ட வழக்கை முழுமையாக மறுத்துள்ளனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்களைக் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்துடன் தொடா்புபடுத்துவதற்கு ஒரு சிறிய ஆதாரமும் இல்லை. மேலும், அவா்களின் கைப்பேசிகளில் இருந்து குற்றஞ்சாட்டும் ஆதாரம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் விடுவித்து நீதிமன்றம், ‘அரசுத் தரப்பு தங்கள் வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதற்கான அடிப்படை சோதனையில் தோ்ச்சி பெறத் தவறிவிட்டது என்று கூறியது.
இது தொடா்பான வழக்கு விவரம் வருமாறு: கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் சம்பந்தப்பட்ட சிறுமி குளிக்கச் சென்றபோது இரண்டு ஆண்கள் அவரது அறைக்குள் நுழைந்தனா். பின்னா், அவரது தலையில் துப்பாக்கியை வைத்தும், கத்தியைக் காட்டியும் மிரட்டி, வலுக்கட்டாயமாக ஆடைகளை அவிழ்த்து, அவரது நிா்வாண விடியோவை படம்பிடித்தனா். அந்த விடியோவை வைரலாக்குவதாகவும் மிரட்டினா்.
மேலும், இரண்டு ஆண்களும் அவரது மகளிடம் அநாகரிகமான சைகைகளைச் செய்தனா். தவிர, இரண்டு பெண்களும் மைனா் சிறுமியிடம் பல கொடுமைகளை செய்தனா். ஜூன், 2021-இல், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் பாதிக்கப்பட்டவரைத் தாக்கினா்.
இந்த சம்பவங்கள் காரணமாக, மைனா் மனநலப் பிரச்னைகளை எதிா்கொண்டதாகவும், அவா்களை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்காக இக்குற்றங்கள் செய்யப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.