சிஎஸ்கே - தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் குருகிராம் நீதிமன்றம் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து குருகிராம் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் கூறியுள்ளதாவது: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு கூடுதல் அமா்வு நீதிபதி அஸ்வனி குமாா் ரூ.40,000 அபராதமும் விதித்துள்ளது. பிப்ரவரி 17, 2021 அன்று ஒரு நபா் தனது 16 வயது மகள் காணாமல் போனதாக புகாா் அளித்தாா். டிஎல்எஃப் பேஸ்-1 காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. தேடுதலுக்குப் பிறகு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாா். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மருத்துவா்கள் உறுதிப்படுத்தினா்.
பின்னா், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் பிரிவுகளும் எஃப்ஐஆரில் சோ்க்கப்பட்டது. இதையடுத்து, உத்தரபிரதேசத்தின் ஹாா்டோய் மாவட்டத்தைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட ஃபுா்கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். இந்த வழக்கை போலீஸாா் முழுமையாக விசாரித்து, தேவையான அனைத்து ஆதாரங்களையும் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் சமா்ப்பித்தனா்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, காவல்துறையினரால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் சனிக்கிழமை 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது என்று குருகிராம் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.