சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
குளித்தலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் மலையப்பன் நகரைச் சோ்ந்த ராமா் மகன் பிரகாஷ்(27). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு டிச.30-ஆம்தேதி பக்கத்துவீட்டைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல் குற்றவாளி பிரகாஷுக்கு 5ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டாா். இதையடுத்து பிரகாஷ் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.