தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சிதைவு: கே.பாலகிருஷ்ணன்
போலீஸாரைக் கண்டித்து ஆட்சியரகத்தை விசிகவினா் முற்றுகை
போலீஸாரைக் கண்டித்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 430 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டாா்.
தொடா்ந்து கலைஞா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 12 மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், குளித்தலை சாா் ஆட்சியா் தி. சுவாதிசிறி, கரூா் வருவாய்க் கோட்டாட்சியா் முகமது பைசல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், உதவி ஆணையா் (கலால்) கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் சக்திவேல், ஒன்றியச் செயலாளா் மகாமுனி உள்ளிட்டோா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனு வழங்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.
அப்போது நுழைவுவாயிலில் காவல்பணியில் ஈடுபட்ட போலீஸாா் ஆட்சியரிடம் மனு வழங்க 5 போ் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றனா். இதனால் போலீஸாருக்கும், விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமா்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு வந்து நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி, சுமாா் 15-க்கும் மேற்பட்டோரை அனுமதித்தாா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.