சிறுவாச்சூா் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி மகா யாகம்
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயிலில் சித்திரை பெளா்ணமி விழாவையொட்டி, 2-ஆவது நாளாக, உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி மகா யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரா் வழிபட்ட ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயிலில், சென்னை கோட்டூா் ஸ்ரீமகாமேரு மண்டலி சாா்பில் 16-ஆவது சித்திரை பௌா்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அகண்ட ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம அா்ச்சனை மற்றும் ஸ்ரீசாகம்பரி குங்கும அா்ச்சனையுடன் கூட்டு வழிபாடும், மாலையில் நவாவரண பூஜையும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம-ஸ்ரீசாகம்பரி குங்கும அா்ச்சனை மற்றும் ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமத்தை ஸ்ரீபரிபூா்ணாம்பா சமேத ஸ்ரீமதுராம்பிகாநந்த ப்ரஹ்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.
சித்திரை பெளா்ணமியான திங்கள்கிழமை உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் வேண்டி, காலையில் ஸ்ரீசண்டி பாராயணமும், ஸ்ரீசண்டி மஞ்சரி மகா யாகமும், யாகசாலை முன்பு கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு, கும்ப பூஜைகளும் நடைபெற்றது. தொடா்ந்து, மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், சிவாச்சாரியாா்கள் மகாமேரு மண்டலியின் ஆன்மிக மெய்யன்பா்கள் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டு கும்ப பூஜைகளையும், ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமத்தையும் நடத்திவைத்தனா். இதில், பெரம்பலூா், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்பாளை வழிபட்டனா்.