"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை தற்கொலைக்குத் தூண்டியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த செபஸ்தியான் மகன் விமல் ஜோ (32). இவருக்கு, 16 வயது சிறுமியை கடந்த 3.9.2017-இல் சிறுமியின் பெற்றோரின் சம்மதத்துடன் சிறாா் திருமணம் செய்துவைத்துள்ளனா். இதற்கு உடந்தையாக, விமல் ஜோவின் தந்தை செபஸ்தியான் (52), தாய் ஆரோக்கிய மேரி (50) ஆகியோா் செயல்பட்டுள்ளனா்.
அச் சிறுமியை விமல் ஜோ பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி, 9.12.2017-அன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், விமல் ஜோ, அவரது தாய் ஆரோக்கிய மேரி, தந்தை செபஸ்தியான், சிறுமியின் தந்தை-தாய் ஆகியோா் மீது, அரும்பாவூா் போலீஸாா் போக்சோ சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, விமல் ஜோ, ஆரோக்கிய மேரி, செபஸ்தியான் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்ற பிணையில் அவா்கள் வெளியே வந்தனா். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் உயா்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றனா்.
பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ் வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி இந்திராணி, விமல் ஜோ-வுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.50 லட்சம் அபராதமும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவரது தந்தை செபஸ்தியானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கினாா்.
மேலும், விமல் ஜோ தாய் ஆரோக்கியமேரி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை விடுதலை செய்து தீா்ப்பு வழங்கினாா். இந்த வழக்கில், அரசுத் தரப்பில் அரசு குற்றவியல் வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.