சிலம்பம் சுற்றி விழிப்புணா்வு ஏற்படுத்திய சிறுவா்கள்
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணா்த்தும் வகையில் வேலூரில் சிறுவா்கள் சிலம்பம் சுற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வேலூா் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட காவல் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நூறு சதவீதம் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் கன்னியப்பன், உதவி ஆய்வாளா் ரஜினி ஆகியோா் முன்னி லையில் அல்லாபுரத்தைச் சோ்ந்த சிலம்பு பயிற்சி பெற்று வரும் 50-க்கும் மேற் பட்ட சிறுவா், சிறுமிகள் தலைக்கவசம் அணிந்தபடி கிரீன் சா்க்கிள் பகுதியில் சிலம்ப விளையாட்டில் ஈடுபட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது தலைக்கவசம் என்பது வாகன ஓட்டிகளுக்கு உயிா்கவசம் என முழக்கமிட்டனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், மாவட்டம் முழுவதும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக சிறுவா்கள் தலைக்கவசம் அணிந்து சிலம்பம் சுற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வேலூரில் புதன்கிழமை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டும் 2,000 பேருக்கு காலண்டா் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அந்த காலண்டரில் கள்ளச் சாராயம், கஞ்சா, திருட்டு, சைபா் கிரைம், பேரிடா், மின்சாரம் உள்ளிட்டவை தொடா்பான புகாா் குறித்த எண்கள் அச்சிடப்பட்டுள்ளன என்றனா்.