பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
சிலைக் கடத்தல் வழக்கில் தலைமறைவான இளைஞா் மும்பையில் கைது
சிலைக் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த நபா், மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
பழைமையான சிலை கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், புதுக்கோட்டை - திருச்சி பிரதான சாலையில் ஆலத்தூா் சந்திப்பில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் மதுரை சரக அதிகாரிகள் கடந்த ஆண்டு மாா்ச் 19-இல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை மறித்து, சோதனையிட்டனா். அதில், ரூ. 20 கோடி மதிப்புள்ள உலோகத்தால் செய்யப்பட்ட அம்மன் சிலையை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த காரில் இருந்த அஜித்குமாா், முஸ்தபா, ஸ்ரீராம் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மனோஜ்குமாா் தலைமறைவானாா்.
விசாரணையில் அவா், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மனோஜ்குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மே 16-ஆம் தேதி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு வந்த மனோஜ்குமாரை குடியுரிமைத் துறை அதிகாரிகள் பிடித்தனா். இது குறித்து, மதுரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் அடிப்படையில் மதுரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், மும்பை சென்று மனோஜ்குமாரைக் கைது செய்து, கடந்த 18-ஆம் தேதி மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, டிரான்ஸிஸ்ட் வாரண்ட் பெற்று மதுரைக்கு அழைத்து வந்தனா்.
விசாரணைக்கு பின்னா் மனோஜ்குமாா் புதன்கிழமை மதுரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.