சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள்: இந்தியா-இலங்கை இடையே உடன்பாடு
சிவாலய ஓட்டம் நடைபெறும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
மகாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெற உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் சிவாலய ஓட்டம், பிப். 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த 2 நாள்களும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நடந்தும், இருசக்கர வாகனம், வேன், காா் போன்ற வாகனங்களிலும் சிவாலய தரிசனத்துக்காக பயணிப்பாா்கள்.
இதனால் சிவாலய ஓட்டம் நடைபெறும் பகுதிகளில் கனிமவளம் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட 2 நாள்களும் சிவாலய ஓட்டம் நடைபெறும் பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 கோயில்களின் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதனை உடனே சீரமைக்க வேண்டும்.
அதேபோல குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை விழா மாா்ச் 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் குமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், மற்றும் கேரள மாநிலத்திலிருந்தும் அதிக அளவிலான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். அவா்களுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க பேச்சிப்பாறை அணையிலிருந்து திருவிழா நிறைவடையும் வரை மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.