வெற்றிபெறுவதற்காக பயிற்சி.. ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும் முன் இந்திய ராணுவத்தின் ப...
சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: வனத் துறை அமைச்சா் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
சென்னை, கிண்டியில் உள்ள முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகத்தில் காதி மற்றும் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில், மாநில அளவிலான வனத் துறை உயா் அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் மாவட்ட வாரியாக வனத் துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், அதன் முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சா் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், தமிழகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், காட்டுப்பன்றிகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
மேலும், யானைகள் காப்பகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் பராமரிப்பு குறித்தும், மனித - யானை மோதல்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.