‘ஆபரேஷன் சிந்தூா்’ பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி -அமித் ஷா
ஆபரேஷன் சிந்தூர்: மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் கொலை!
இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப். 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழுச் சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு - காஷ்மீரில் 4 காவலர்களை கொன்ற பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற சியால்கோட்டில் உள்ள சர்ஜல் முகாம் அழிக்கப்பட்டது.
அதேபோல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையிடம், மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரி உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உறுப்பினர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர், அவரது மருமகன் மற்றும் அவரது மனைவி, மற்றோரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001-ல் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008-ல் நடந்த மும்பை தாக்குதல் உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர் மசூத் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அதிரடித் தாக்குதலுக்கு சிந்தூர் எனப் பெயரிட்டது ஏன்?