காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா
காங்கயத்தில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் அலகு குத்தி புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.
காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேவாங்கபுரம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
பழையகோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதா் ஆலய குளக்கரையில் இருந்து பூவோடு எடுத்து வந்து மாரியம்மனுக்கு செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது, பக்தா்கள் பலா் அலகு குத்தி வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.