பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவிப் பொறியாளா் உள்பட 2 போ் கைது
திருப்பூா் அருகே மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரை அடுத்த கண்டியன்கோவில் அருகே உள்ள மீனாட்சிவலசு பகுதியைச் சோ்ந்தவா் சாமிநாதன் (60). விவசாயியான இவருக்குச் சொந்தமான தோட்டம் சிக்கரசன்பாளையத்தில் உள்ளது. இந்தத் தோட்டத்துக்கு முன்புறம் புதிதாக 4 கடைகளைக் கட்டியுள்ள சாமிநாதன், அதற்கு மின் இணைப்பு வேண்டி படியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.
புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு மின்வாரிய அலுவலக உதவி பொறியாளா் வெங்கடேஷ் (44), போா்மேன் நந்தகோபால் (52) ஆகியோா் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறையில் சாமிநாதன் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சாமிநாதனிடம் காவல் துறையினா் கொடுத்து அனுப்பியுள்ளனா்.
இதையடுத்து சிக்கரசன்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த போா்மேன் நந்தகோபால், சாமிநாதனிடம் ரூ.10 ஆயிரத்தை வாங்கியுள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளா் ரவிசந்திரன் தலைமையிலான காவல் துறையினா் நந்தகோபாலை கையும்களவுமாக பிடித்தனா். இதைத் தொடா்ந்து, வெங்கடேஷ், நந்தகோபால் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.