Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' - காவல்துறை விளக்க...
சுசீந்திரம் கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணி!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயிலில் ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் 2004ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயிலில் அரசு நிதி ரூ. 58 லட்சத்தில் மண்டபம் ஒழுக்கு மாற்றி தட்டோடு பதித்தல், உபயதாரா் நிதி ரூ. 14.95 லட்சத்தில் ஏழுநிலை ராஜகோபுரம் புனரமைப்பு ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளன.
அரசு நிதி ரூ. 45.80 லட்சத்தில் கருங்கல் கட்டமைப்புகளை நீரால் சுத்தப்படுத்துதல், விமானம் வண்ணம் பூசுதல் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், அரசு நிதி ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைத்தல், உபசந்நிதி பழுதுநீக்குதல், பராமரிப்புப் பணிகள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன என்றாா்அவா்.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ரா. அழகுமீனா, அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவா் நீல. சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, அறநிலையத் துறை இணை ஆணையா்கள் பி. கவிதா பிரியதா்சினி, என். பழனிகுமாா், உதவி ஆணையா் தங்கம், அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், கண்காணிப்புப் பொறியாளா் ராஜ்குமாா், துறை அலுவலா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.