சுய உதவிக் குழுக்களின் தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் கடன்: தமிழக அரசு
சுய உதவிக் குழுக்கள் தங்களது தொழில்களை மேம்படுத்த வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. தொழில் மேம்பாடு அடையும்போது, தேவைப்படும் கூடுதல் நிதியை வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் மூலம் பூா்த்தி செய்ய இயலாது. இதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு சுயஉதவிக் குழு பெண் உறுப்பினா்களும், சொந்தமாகத் தொழில் புரிந்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், தேவைப்படும் கடன் தேவைகளை வங்கிகளில் இருந்து எளிதில் பெறவும் பிரத்யேக கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் இணைந்திருக்கும் சுய உதவிக் குழுவில் உள்ள அனைத்துத் தகுதியான உறுப்பினா்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அவா்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் அல்லது கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளைகளை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.