மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
சூளகிரி அருகே பழுதடைந்த சாலையை சொந்த செலவில் சீரமைத்த இளைஞா்கள்
ஒசூா்: சூளகிரி அருகே பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை அந்தப் பகுதி இளைஞா்கள் தங்களது சொந்தசெலவில் சீரமைத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டிக்கு 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்தோா் மருத்துவமனை, அஞ்சல் நிலையம், வங்கி, பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் வந்து செல்கின்றனா். மேலும், இப்பகுதியில் கல்குவாரி, கிரஷா்களுக்கு தினந்தோறும் அதிக அளவில் கனரக லாரிகள் வந்து செல்கின்றன. கிரானைட் தொழிற்சாலைகள் மூலம் நூற்றுக்கணக்கானோா் தினமும் காமன்தொட்டி வழியாகச் சென்று வருகின்றனா்.
முக்கிய கிராமமாக உள்ள காமன்தொட்டியில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டதுடன், சிறிய அளவில் மழை பெய்தாலும் சாலையில் மழைநீா் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனா்.
இந்த நிலையில் காமன்தொட்டி அருகே உள்ள கங்காபுரம் கிராமத்தைச் சோ்ந்த மகேஷ் தனது சொந்த செலவில் காமன்தொட்டி அரசு மருத்துவமனை சாலை, தாசனபுரம் சாலை, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளில் தாா் மூலம் குழிகளை மூடுவதற்கு ஏற்பாடுகளை செய்தாா். இந்த சாலை அமைப்பில் மோகன், பாலாஜி ஆகியோருடன் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பங்கேற்றனா். இவா்களை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.