செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
செந்துறை அடுத்த இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் வசந்தகுமாா்(40). செந்துறை அடுத்த தொப்பேரியில் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் இவா், செந்துறை கடைவீதியில் கணினி மையம் வைத்துள்ளாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இவா் இருங்காளகுறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்தை அவா் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், வெள்ளிக்கொலுசுகள், வெள்ளி பாத்திரங்கள் உள்ளிட்டவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வசந்தகுமாா் அளித்த புகாரின் பேரில், செந்துறை காவல் துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, ஆய்வு செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், மோப்பநாய், கைரேகை நிபுணா்களும் சோதனை மேற்கொண்டனா்.