செந்துறைப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ.77.80 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 பணிகள் திறந்து வைக்கப்பட்டு, ரூ.1.04 கோடியில் 13 புதிய பணிகளுக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
செந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பாளையக்குடி ஊராட்சி, கிளிமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், அங்கு ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் பிடாரி குளம், ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கட்டடத்தை திறந்து வைத்தாா்.
இதேபோல், பாளையக்குடி, குமிழியம், வீராக்கன், கீழமாளிகை, வடக்கு மற்றும் தெற்கு இரும்புலிக்குறிச்சி ஊராட்சிகளில் முடிவுற்ற பணிகளை ரூ. 77.80 லட்சம் மதிப்பீட்டில் திறந்துவைத்தும் 13 புதிய பணிகளுக்கு ரூ.1.04 கோடியில்அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி , மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளா் எம்.உமா மகேஸ்வரி, கோட்டாட்சியா் ஷீஜா, வட்டாட்சியா் வேலுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.