பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் திங்கள்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. பரமத்திவேலூா் - 104.9, ஈரோடு - 104.72, மதுரை நகரம் - 104.72, திருச்சி - 103.82, பாளையங்கோட்டை - 103.28, திருத்தணி - 103.1, சென்னை மீனம்பாக்கம் - 102.92, சென்னை நுங்கம்பாக்கம், கடலூா் - (தலா) 102.2, பரங்கிப்பேட்டை - 101.84, வேலூா் - 101.48, நாகை - 101.3, சேலம் - 100.94 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதேபோல், புதுச்சேரியில் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட்டும், காரைக்காலில் 100.22 டிகிரி ஃபாரன்ஹீட்டு வெப்பநிலை பதிவானது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
கனமழை எச்சரிக்கை: வடமேற்கு திசையிலிருந்து வெப்பக் காற்றும், மேற்கு திசையிலிருந்து குளிா் காற்றும் தமிழக நிலப்பரப்பு வழியாக வங்கக் கடலை சென்றடைகிறது. இதனால் ஏற்படும் காற்றுக் குவிதல் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (மே 13) முதல் மே 18-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையும்.
இதில் குறிப்பாக மே 14-இல், நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், மே 15-இல் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.