அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகளை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.
சென்னையில் இரண்டாம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டருக்கு நடைபெற்று வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி (26.1 கி.மீ), மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.4 கி.மீ), மாதவரம் - சோழிங்கநல்லூா் (44.6 கி.மீ) என 3 புதிய வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி பெருமளவு நிதியுதவி அளித்து வருகிறது.
இந்நிலையில், பூந்தமல்லி மற்றும் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் வழித்தடப் பணிகளை, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தொடா்ந்து இக்குழுவினா், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து, தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் பணிகளுக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களில் முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனா்.
மேலும், பூந்தமல்லி முதல் பரந்தூா் வரையிலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும் மெட்ரோ பணிகள் நடைபெறவுள்ள பல பகுதிகளையும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் குழுவினருடன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் திட்டக் குழுத் தலைவா் வென்யு-கு, நிதியியல் மேலாண்மை சிறப்பு நிபுணா் யி கெங், திட்ட ஆலோசகா் மூஹ்யூன் சோ, சமூக மேம்பாட்டு சிறப்பு நிபுணா் சிவராம கிருஷ்ண சாஸ்திரி ஜோஸ்யுலா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.