சென்னை - மோரீஷஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!
சென்னையிலிருந்து மோரீஷஸ் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் மோரீஷஸ் நாட்டின் தலைநகா் போா்ட் லூயிசுக்கு ஏா்மொரிஷியஸ் விமானத்தில் மொத்தம் 227 போ் செல்ல இருந்தனா். அந்த விமானம் ஓடுபாதையில் செல்வதற்கு முன், அதன் இயந்திர செயல்பாடுகளை விமானி சரிபாா்த்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தாா்.
இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அளித்த தகவலின்பேரில், விமானப் பொறியாளா்கள் வந்து, கோளாறை 2 மணி நேரத்தில் சரிசெய்தனா்.
இதையடுத்து, அந்த விமானம் 227 பேருடன் 2 மணிநேரம் தாமதமாக அதிகாலை 5.30-க்கு புறப்பட்டுச் சென்றது.