டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!
சென்னையிலேயே நடக்கும் மலையாள பிக் பாஸ் ஷூட்டிங் - ஏன் தெரியுமா? மோகன்லால் என்ன சொல்கிறார்?
இரு தினங்களுக்கு முன் தொடங்கியிருக்கிறது மலையாள பிக்பாஸ் சீசன் 7. வழக்கம் போல் இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார் மோகன்லால்.
சர்வதேச அளவில் பிக் பிரதர் என்ற பெயரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியே இந்தியில் பிக் பாஸ் என வந்தது. அங்கே அது ஹிட் ஆனதைத் தொடர்ந்து, தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளிலும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் 9வது சீசன் வரும் அக்டோபரில் தொடங்க உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை கன்னட பிக்பாஸின் ஷூட்டிங் பெங்களூருவிலும், தெலுங்கு பிக்பாஸ் ஷூட்டிங் ஐதராபாத்திலும் தமிழ் பிக்பாஸ் ஷூட்டிங் சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள ஈ.வி.பி செட்டிலும் நடந்து வருவது எல்லாருக்கும் தெரியும்.
அதேநேரம் மலையாள பிக்பாஸ் ஷூட்டிங் மட்டும் தமிழ் பிக்பாஸ் ஷூட் நடக்கும் அதே ஈ.வி.பி செட்டில்தான் நடந்து வருகிறது. மோகன்லால் ஒவ்வொரு வாரமும் இங்கு வந்துதான் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

மலையாள பிக்பாஸ் ஷூட்டிங் ஏன் கேரளாவில் நடப்பதில்லை என்பது குறித்து அந்த நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் பேசினோம்.
‘’மலையாள பிக்பாஸ் இதுவரை 8 சீசன் போயிருக்கு. இதுல ஒரேயொரு சீசன் மட்டும் மும்பையில் நடந்தது. மத்த எல்லா சீசனுமே பூந்தமல்லி ஈ.வி.பி செட்டில்தான் நடந்தது. மும்பையில் ஷுட்டிங் போனா புரடக்ஷன் செலவு அதிகமாகுதுன்னு தொடர்ந்து இங்கேயே பண்ணச் சொல்லிட்டாங்க. அதனால இந்த சீசனும் இங்கேயே தொடங்கிட்டாங்க.
ஆனா முன்னாடியெல்லாம் மலையாள சீசன் ஜூன் மாதம் தொடங்கிடும். அதனால அது முடிஞ்ச பிறகு அதே இடத்துல தமிழ் பிக்பாஸ் செட் அமைக்கப்படும்.
ஆனா இந்த வருஷம் மலையாளமே லேட் ஆகிடுச்சு. அதனால ஈ.வி.பி க்கு உள்ளேயே தமிழ் பிக்பாஸ் வீடு அமைகிற இடத்துக்கு பக்கத்துலயே தனியா செட் போட்டிருக்காங்க. நவம்பர் மாதம் அது முடிவுக்கு வரும். ஆனா அக்டோபர்ல தமிழ் பிக்பாஸ் தொடங்கிடும்’’ என்ற அவர்களிடம், ஷூட்டிங்கை கேரளாவில் வைத்துக் கொள்ளாததன் காரணம் குறித்தும் கேட்டோம்.
‘’முதல்ல கிளைமேட். தொடர்ச்சியா அங்க பெய்கிற மழை ஷூட்டிங்கிற்கு இடைஞ்சலா இருக்குது. சமயங்கள்ல வெள்ளமெல்லாம் வந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுச்சுன்னா அந்த நேரத்துல ஷூட்டிங் நடத்த முடியாதுங்கிறது ஒரு காரணம். அதையும் மீறி நடத்தினா பாதுகாப்பு இருக்காது. மக்களே கொந்தளிச்சிடுவாங்கனு யோசிக்கிறாங்க. அவங்களுக்கு பொழுதுபோக்கெல்லாம் ரொம்ப முக்கியமானதில்லை.
அப்பப்ப தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் நடத்துவாங்க. அப்பவும் ஷூட் நடத்த முடியாது. மக்கள் அவ்வளவு ஒற்றுமையா போராடுவாங்க. இதை வேற எந்த மாநிலத்துலயும் பார்க்க முடியாது. தமிழ்நாட்டுல எந்த பிரச்னை வந்தாலும் ஷூட்டிங் பிரச்னையில்லாம நடக்கும். ஆனா அங்க அப்படி முடியாது. உள்ளூர் அளவுல பிரபலமா இருக்கிறவங்க மறைந்தாக் கூட ஷூட்டிங்கை நிறுத்தச் சொல்லிடுவாங்க.
ஷூட்டிங் வசதிகள் மற்றும் டெக்னீசியன்கள் தமிழ்நாடு அளவுக்கு அங்க இல்லைங்கிறதும் இன்னொரு முக்கிய காரணம். மும்பையில் ஷூட்டிங் நடந்தப்பக் கூட சென்னையிலிருந்து டெக்னீஷியன்களைக் கூட்டிட்டுப் போனாங்க’ என்கிறார்கள் இவர்கள்.
சென்னையிலேயே ஷூட்டிங் என்பது பற்றி மோகன்லால் ஏதாவது சொல்லவில்லையா?’ என்றால்,
’அவருக்கு சென்னை ரொம்ப இஷ்டம். ‘என்னுடைய மாமியார் வீடே அங்கதானே இருக்கு’னு ஜாலியாக் கடந்து போய் விடுவார்’ என்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...