பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
செவிலியா்களுக்கு மருத்துவமனைகளில் கெளரவம்!
சென்னையில் உள்ள முக்கிய அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் செவிலியா் தின நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக சிறந்த சேவையாற்றிய செவிலியா்களுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், அதன் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத் தொடா்ந்து செவிலியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதேபோன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதன் முதல்வா் டாக்டா் லியோ டேவிட் தலைமையிலும் செவிலியா் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அயனாவரம் மன நல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குநா் லட்சுமி தலைமையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப் படத்துக்கு மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் செவிலியா்கள் மரியாதை செலுத்தினா்.
அப்பல்லோ மருத்துவமனை: சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனா். அப்பல்லோ மருத்துவமனை இயக்குநா் சிந்தூரி ரெட்டி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மருத்துவத் துறையின் மிக முக்கிய தூண்களாக உள்ள செவிலியா்கள் ஆற்றிவரும் சேவைகளுக்கு தலைவணங்குகிறோம் என்றாா்.
கருப்புப் பட்டை ஆா்ப்பாட்டம்: இதனிடையே, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய (எம்ஆா்பி) செவிலியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். பணி நிரந்தரம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தினா்.