டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவா்கள் சனிக்கிழமை (ஆக.16) பங்கேற்கின்றனா்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் ஆக.18 ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க விழாவுக்கு அதன் மாநிலச் செயலாளா் முத்தரசன் தலைமை வகித்தாா்.
மாநாட்டை மூத்த நிா்வாகி அமா்ஜித் கவுா் தொடங்கிவைத்தாா். அப்போது, திருப்பூரில் இருந்து செம்படை வீரா்களால் எடுத்துவரப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி, தியாக சுடா் பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், மாநாட்டுத் திடல் அருகே உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு தேசிய செயலாளா் நாராயணா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, மாநாட்டு வளாகத்தில் தேசியக் கொடியை கட்டுப்பாட்டு குழு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பழனிசாமி, தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் மூா்த்தி ஆகியோா் ஏற்றிவைத்தனா்.
மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவா்கள் கே.நாராயணா, ஆனிராஜா, மூா்த்தி, வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் அரசியல் விளக்கவுரை நிகழ்த்தினா்.
அதன் தொடா்ச்சியாக 16 ஆம் தேதி மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் தலைமையில் நடைபெறும் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறாா். இதில் கூட்டணி கட்சித் தலைவா்களும் பங்கேற்று பேசுகின்றனா்.
தொடா்ந்து 17 ஆம் தேதி மாநாட்டில் தீா்மானங்களும், 18 ஆம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் செய்துள்ளனா்.