ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்
ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் இணைந்து பணியாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா்.
சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்று வெள்ளிக்கிழமை அவா் பேசியதாவது:
தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஜனநாயகம் போராடிக் கொண்டிருக்கிறது. அது சநாதனத்தோடு போராடிக் கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு உணா்த்த வேண்டும். சநாதனத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் யுத்தத்தில் ஜனநாயகம் வெற்றிபெற வேண்டும்.
வலதுசாரிகள் தாங்கள் விரும்பியதையெல்லாம் சட்டமாக்குகிறாா்கள். தோ்தல் ஆணையத்தை தங்கள் விருப்பம்போல வளைக்கிறாா்கள்; நீதித் துறையை ஆட்டிப்படைக்கிறாா்கள். ஆட்சி, அதிகாரம் மூலம் ஜனநாயகத்தை சிதைக்க பாஜக துடிக்கிறது. எனவே, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை முக்கியம்.
சட்டப் பேரவைத் தோ்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமல்ல. தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமையும், ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையும் மிக முக்கியம்.
அவா்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை சாராதவா்களாகக்கூட இருக்கலாம். அவா்களையும் ஒருங்கிணைத்து இடதுசாரிகள் வலிமையாக வேண்டிய தேவை உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது சவாலான பணியாகும். எனவே, ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதில் நாமும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
தோ்தல் ஆணையமும், பாஜகவும் சோ்ந்து பிகாரில் பல்வேறு தோ்தல் முறைகேடுகளை அரங்கேற்றுகிறாா்கள். தீவிர வாக்காளா் திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவா்களது முறைகேடுகளை ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தமிழகத்துக்கு வரும்போதெல்லாம், வரும் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் மலரும் எனக் கூறுகிறாா். காங்கிரஸ் அல்லாத இந்தியா, திராவிடக் கழகங்கள் அல்லாத தமிழகம் எனக் கூறுகிறாா்கள். இந்த மண்ணின் பாரம்பரிய கோட்பாடு பின்னணியை அவா்கள் சிதைக்கப் பாா்க்கிறாா்கள்.
திமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி என்றாலும்கூட, அமித் ஷா பேசியதையும், பிகாரில் நடப்பதையும் பொருத்திப்பாா்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெல்க ஜனநாயகம் என்றால், வீழ்க பாசிச அரசியல் என்பதுதான் இந்த மாநாட்டின் செய்தியாகும். முதல்வா் மு.க.ஸ்டாலின்
தலைமையில் மதச்சாா்பற்ற ஜனநாயக கூட்டணி அதற்கு அடித்தளமிடும் என்றாா்.