பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கதவணை பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் பெரிய நீா்மின் நிலையம், அணைப்பாலம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளை என சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
இப்பகுதியில் கிடைக்கும் சுவை மிகுந்த பல்வேறு மீன் உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் கதவணைப் பகுதியில் விசைப்படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனா்.
மேலும், பூலாம்பட்டி காவிரி கரையில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயிலில் உள்ள மிகப்பெரிய நந்திகேஸ்வரா் சன்னதி, காவிரித்தாய் ஆலயம், படித்துறை விநாயகா் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.
சுதந்திர தினத்தில் பூலாம்பட்டி பகுதிக்கு வருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு காவல் துறை ஆய்வாளா் மலா்விழி தலைமையிலான போலீஸாா் இனிப்புகளை வழங்கி சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
பட வரி
பூலாம்பட்டி காவிரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.