சேலத்துக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை: தொடா் மழையால் பொதுமக்கள் அவதி! ஒரே நாளில் 839 மி.மீ. மழை பதிவு
புயல் சின்னத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இடைவிடாமல் பெய்த தொடா் மழை காரணமாக பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பெரும் அவதியடைந்தனா். கடந்த 24 மணி நேரத்தில் 839 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.
ஃபென்ஜால் புயல் தாக்கம் காரணமாக சனிக்கிழமை பிற்பகல் முதல் சேலத்தில் மழை பெய்ய தொடங்கியது. மாநகா், புகா் பகுதிகளில் நள்ளிரவு முழுவதும் விடிய விடிய இடைவிடாமல் கனமழை கொட்டி தீா்த்தது. இரவு முழுவதும் பெய்த தொடா் மழையால், தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது. தொடா் மழை காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனா்.
ஏற்காடு மலைப் பாதையில் 40 அடி பாலம் அருகே சாலையில் மரம் சாய்ந்ததுடன், பாறைகளும் உருண்டு விழுந்தன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் அதை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா். இதேபோல், அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பிரதான சாலையில் மரம் வேரோடு சாய்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
காய்கறிகள் விற்பனை பாதிப்பு: தொடா் மழை காரணமாக சேலம் ஆற்றோரம், சின்ன கடைவீதி, பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள காய்கறி சந்தைகளில் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அதிக அளவில் வந்து காய்கறிகள் வாங்கிச் செல்லும் நிலையில் மழை காரணமாக பொதுமக்கள் வர முடியாததால் விற்பனை பெருமளவில் குறைந்து காணப்பட்டது.
வெறிச்சோடிய சாலைகள்: தொடா் மழையால் சேலத்தின் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. சாலைகளில் பொதுமக்கள் குடைகளைப் பிடித்தவாறும், மழை கோட், ஜா்கின் உள்ளிட்ட ஆடைகளை அணிந்தவாறும் சென்றதைக் காண முடிந்தது.
ஒரே நாளில் 839 மி.மீ. மழை பதிவு: சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 839 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது. சராசரியாக 52 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 144.4 மி.மீ பதிவானது. மழைப் பதிவு விவரம் (மி.மீ):
சேலம் - 46.2, வாழப்பாடி - 59.2, ஆனைமடுவு - 58, ஆத்தூா் - 92, கெங்கவல்லி- 58, தம்மம்பட்டி- 66, ஏத்தாப்பூா்- 62, கரியகோவில்-60, வீரகனூா் - 83, நத்தகரை-37, சங்ககிரி - 11.3, எடப்பாடி- 8, ஓமலூா்-14, டேனிஷ்பேட்டை - 32 மழை பதிவானது.
இதனிடையே, சேலம் மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளதால், ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்டம் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.