‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’
சேலம் மாநகரப் பகுதிகளில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
சேலம் மாநகரப் பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூக்கனேரியில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சேலம் மாநகரப் பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிலைகளை கன்னங்குறிச்சி மூக்கனேரியில் சிலைகளை விசா்ஜனம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் 60க்கும் மேற்பட்ட வண்டிகளில் வெள்ளிக்கிழமை மாலை எல்லைப்பிடாரி அம்மன் கோயில் பகுதிக்கு எடுத்து வரப்பட்டன.
தொடா்ந்து, வெவ்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான சிலைகள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக மூக்கனேரிக்கு கொண்டு செல்லப்பட்டன. விநாயகா் சிலை ஊா்வலத்தில் பெண்கள் விளக்குகளை ஏந்தியவாறு பங்கேற்றனா். முன்னதாக, தாரை தப்பட்டைகள் முழங்க, விநாயகா் வேடமிட்டபடி சிறுவா்கள் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.
இந்த ஊா்வலத்துக்கு இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளா் கிஷோா்குமாா் தலைமை வகித்தாா். சேலம் கோட்டத் தலைவா் சந்தோஷ்குமாா், சேலம் மாவட்டத் தலைவா் கண்ணன் மற்றும் திரளான இந்து முன்னணி நிா்வாகிகள், பாஜகவினா் பங்கேற்றனா்.
ஊா்வலம் மூன்னேரியை அடைந்ததும் ஒன்றன் பின் ஒன்றாக விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன. பொதுமக்கள் யாரும் தண்ணீரில் இறங்காத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காவல் துறை தீவிர கண்காணிப்பு: விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி, சேலம் மாநகரில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
போக்குவரத்து மாற்றம்: விநாயகா் சிலைகள் ஊா்வலத்தையொட்டி, சேலம் எல்லைப் பிடாரியம்மன் பகுதியில் இருந்து மூக்கனேரி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி செல்லும் வாகனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அண்ணா பூங்கா, நான்கு சாலை, ஆட்சியா் பங்களா, அய்யந்திருமாளிகை வழியாக திருப்பிவிடப்பட்டன. அதேபோல, மறுமாா்க்கத்தில், கன்னங்குறிச்சியில் இருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு வரும் வாகனங்கள், அய்யந்திருமாளிகை, மாவட்ட ஆட்சியா் பங்களா, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக திருப்பிவிடப்பட்டன.