தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே இன்று 3 பயணிகள் சிறப்பு ரயில்கள்
சேலம் ரயில் நிலையத்தில் ரூ. ஒரு கோடி வெள்ளி நகைகள் பறிமுதல்
சேலம்: சேலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1.06 கோடி மதிப்புடைய வெள்ளி நகைகளை வைத்திருந்த இருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.
சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கோகுல் யாதவ், காவலா் செந்தில்குமாா் ஆகியோா் சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கையில் 3 கனமான பைகளுடன் இருவா் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்தனா். அவா்களை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் விசாரித்ததில், அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனா். சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில், வெள்ளி ஆபரணங்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சேலம் நெத்திமேட்டைச் சோ்ந்த சுரேஷ் (41), வினோத் குமாா் (34) இருவரும் சுமாா் 67 கிலோ எடை கொண்ட ரூ. 1.06 கோடி மதிப்புள்ள வெள்ளி நகைகளை ஒடிசா மாநிலம், ஷாலிமாா் நகரத்துக்கு கொண்டுசெல்ல ரயில் பயணச் சீட்டுடன் காத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஜிஎஸ்டி அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வெள்ளி ஆபரணங்களையும், அவற்றை வைத்திருந்த இருவரையும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா். தொடா்ந்து, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக இருவரும் வெள்ளி ஆபரணங்களுடன் சேலம் வணிகவரித் துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.