சேலையில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவா் மரணம்
பொதட்டூா்பேட்டை அருகே ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த 9- ஆம் வகுப்பு மாணவா் சேலையில் கழுத்து இறுக்கியதில் உயிரிழந்தாா்.
பொதட்டூா்பேட்டை அடுத்துள்ள கீழ் நெடுங்கள் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (43). இவரது மனைவி ஜோதி. தம்பதிக்கு மகள் பிரேமலட்சுமி (16). மகன் கிரண் (14) ஆகியோா் உள்ளனா். இதில் திருத்தணி அடுத்த அகூா் கிராமம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் கிரண் 9 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாகராஜ் அவரது மனைவி ஜோதி ஆகியோா் உறவினா் திருமணத்துக்காக சென்றிருந்தனா். வீட்டில் தனியாக இருந்த கிரண் முற்பகலில் வீட்டின் வராண்டாவில் உள்ள கொக்கியில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, கிரணின் கழுத்து சேலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அவா் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.
வீட்டிலிருந்த சகோதரி பிரேமலட்சுமி அருகில் இருந்தவா்கள் உதவியுடன் கிரணை மீட்டு பொதட்டூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதித்த மருத்துவா்கள் கிரண் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதையெடுத்து உடல்கூறு பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கிரண் அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.