சைஃப் அலிகான் வழக்கு: முக்கியக் குற்றவாளி சத்தீஸ்கரில் கைது!
நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியை சத்தீஸ்கரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் ஊடுருவிய மர்மநபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நடந்ததாக கூறப்படும் இந்த தாக்குதலில் சைஃப் அலிகான் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க| சைஃப் அலிகானிடம் ரூ.1 கோடி கேட்ட குற்றவாளி! 20 தனிப்படைகள் அமைப்பு!
அவருடைய தண்டுவடத்தில் சிக்கியிருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி, அவசர அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவர் அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாக நேற்று (ஜன. 17) மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சைஃப் அலிகான் மீதான தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர், அவரை கத்தியால் குத்திய நபரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று முக்கியக் குற்றவாளியான ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா (31) என்பவர் மும்பையிலிருந்து கொல்கத்தா செல்லும் ஜானேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது கைது செய்யப்பட்டார்.
இன்று மதியம் 12.30 மணியளவில், மும்பை போலீஸிடமிருந்து குற்றவாளி குறித்து கிடைத்த தகவலின்படி குற்றவாளியின் மொபைல் எண் இருக்குமிடம் மற்றும் அவரின் புகைப்படத்தை வைத்து ரயில்வே போலீஸார் ஜானேஷ்வரி எக்ஸ்பிரஸில் துர்க் ரயில் நிலையம் வருவதற்கு முன்பு தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
இதையும் படிக்க| சைஃப் அலிகான் வழக்கில் யாரையும் கைது செய்யவில்லை: காவல் துறை
சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் இரு போலீஸ் படைகள் தயார் நிலையில் இருந்தனர். ரயில் நிலையத்தை அடைந்தவுடன் அந்த நபரை கைது செய்து புகைப்படத்துடன் ஒப்பிட்டு உறுதி செய்துகொண்டனர்.
குற்றவாளியைக் காவலில் எடுக்க மும்பை காவல்துறையினர் விமானத்தில் இன்று ராய்ப்பூர் செல்வதாகக் கூறப்படுகிறது.