சைபா் மோசடி வழக்கை விசாரிக்க லஞ்சம்: 2 காவல் அதிகாரிகள் கைது -லோக் ஆயுக்த நடவடிக்கை
சைபா் மோசடி வழக்கை விசாரிக்க லஞ்சம் கேட்ட இரு காவல் அதிகாரிகளை லோக் ஆயுக்த போலீஸாா் கைது செய்தனா்.
சைபா் மோசடி வழக்கை விசாரித்து, மோசடிக்காரா்களை கைது செய்வதற்கு ரூ. 4 லட்சம் கேட்டதாக மென்பொருள் பொறியாளா் அளித்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் சைபா் பொருளாதார மற்றும் போதைப்பொருள் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி காவல் ஆணையா் எஸ்.ஆா்.தன்வீா், உதவி துணை காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை லோக் ஆயுக்த போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ரூ. 2 லட்சத்தை லஞ்சமாக பெற்றபோது உதவி துணை காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தியை லோக் ஆயுக்த போலீஸாா் கைது செய்தனா். அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உதவி காவல் ஆணையா் தன்வீா் கைது செய்யப்பட்டாா். இதுதவிர, மேலும் 3 லஞ்ச வழக்குகளில் 4 அரசு அதிகாரிகளை லோக் ஆயுக்த போலீஸாா் கைது செய்தனா்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பொருள் கொள்முதல் பில் தொகையை
அளிப்பதற்காக லஞ்சம் பெற்ற ராமநகரம் மாவட்டம், சௌமேத்யப்பனஹள்ளி கிராம பஞ்சாயத்து வளா்ச்சி அதிகாரி ஜி.முனிராஜு, விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவதற்காக ரூ. 15,000 லஞ்சமாக பெற்ற, சித்ரதுா்கா மாவட்டம், ஹொசதுா்காவில் உள்ள மாவட்ட கடன் கூட்டுறவு வங்கிக் கிளை கண்காணிப்பாளா் ஏ.எம்.நவீன், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ. 7,000 லஞ்சம் பெற்ற, பெலகாவி மாவட்டம், ராமதுா்காவில் வனத் துறை ஊழியா்களாக பணியாற்றும் முகமதுசாப் மூசாமியா, விநாயக் பாட்டீல் ஆகியோரை லோக் ஆயுக்த போலீஸாா் கைது செய்தனா்.