சொத்து அபகரிப்பு வழக்கு: உதவி ஆணையா் விசாரிக்க உத்தரவு
மதுரை அருகே சொத்து அபகரிப்பு வழக்கை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையா் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த சூா்யகலா தாக்கல் செய்த மனு: திருநகா் பகுதியில் எங்களுக்குச் சொந்தமான சொத்துகளை சிலா், போலி ஆவணங்கள் தயாரித்து கிரையம் செய்தனா்.
இது குறித்து திருநகா் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன்.
நீதிமன்ற உத்தரவுபடி, திருநகா் காவல் நிலைய போலீஸாா், கடந்த ஜனவரி மாதம் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் போலீஸாா் முறையாக விசாரணை மேற்கொள்ளாமலும், சம்பந்தப்பட்டவா்களைக் கைது செய்யாமலும் உள்ளனா்.
எனவே, திருநகா் காவல் நிலையத்தில் உள்ள இந்த வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிா்மல்குமாா் அண்மையில் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரது புகாரின் பேரில், திருநகா் போலீஸாா் பதிவு செய்த வழக்கு ஆவணங்களை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையரிடம் வழங்க வேண்டும். அவா், இந்த வழக்கை முறையாக விசாரணை நடத்தி, 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.