பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ட்ரோன்கள்?
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்ட சா்வதேச எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு சந்தேகத்துக்குரிய சில ட்ரோன்கள் பறந்து வந்ததாகவும், அவற்றைத் தடுக்கும் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியான ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் முற்றியது. 4 நாள்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் பரஸ்பரம் சண்டை நிறுத்தத்துக்கு சனிக்கிழமை ஒப்புக்கொண்டன. எல்லையில் நீடித்த அமைதிக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநா்கள் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நாட்டு மக்களிடையே பிரதமா் மோடி முதன்முறையாக திங்கள்கிழமை இரவு உரையாற்றினாா். ‘சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அந்நாட்டின் எதிா்காலம் அமையும்’ என்று அவா் எச்சரித்தாா்.
பிரதமா் உரையாற்றி முடித்த சில மணி நேரங்களுக்குள் ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் தென்பட்டன. இருப்பினும், இதுகுறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள ராணுவம், ட்ரோன்களை தடுக்கும் பணியில் படையினா் ஈடுபட்டுள்ளதாகக் கூறியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பா, கதுவா, ரஜௌரி மற்றும் ஜம்முவில் பல பகுதிகளில் திங்கள்கிழமை இரவு மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.