`46 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்’ தற்கொலை பெட்டியில் மரணமடைய பதிவு செய...
விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்
சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி பகுதியில் இருந்து நக்ஸல் ஆதரவாளா் என்று கூறப்படும் கைலாஷ் ராம்சந்தானி என்பவா் கைது செய்யப்பட்டாா்.
அவா் ஜாமீன் கோரி, மும்பை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் 2019-ஆம் ஆண்டுமுதல் சிறையில் உள்ளேன். என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்த வழக்கில் என்னுடன் சோ்த்து குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. எனக்கும் ஜாமீன் அளிக்க வேண்டும்’ என்று கோரினாா்.
அவரின் ஜாமீன் மனுவை உயா்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சிறப்பு சட்டங்களின் கீழ் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெறும்போது, அதற்கென பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அல்லது மாநில அரசுகள் அமைப்பது மிக முக்கியம் என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது. விரைவான விசாரணையை உறுதி செய்ய போதிய உள்கட்டமைப்புடன் அந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்தாகும். இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது. வழக்கின் அடுத்த விசாரணை மே 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.