பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
பாகிஸ்தான் குண்டுவீச்சு நிறுத்தம்: வீடு திரும்பும் எல்லையோர மக்கள்
பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரில் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய எல்லையோர மக்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா்.
பாகிஸ்தானின் சமீபத்திய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 போ் உயிரிழந்தனா். 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் 20 போ் பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்.
இந்நிலையில், பாகிஸ்தானின் குண்டுவீச்சால் அந்த மாவட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அவருடன் அவரின் மகன்கள் சமிா், சாஹிா், ஜம்மு-காஷ்மீா் அமைச்சா் ஜாவேத் ராணா உள்ளிட்டோா் சென்றனா். அப்போது பாகிஸ்தான் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை முதல்வா் ஒமா் சந்தித்து இரங்கல் தெரிவித்தாா். அவரிடம் கள நிலவரம் குறித்து உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா். சுரன்கோட் பகுதியிலும் எல்லையோரங்களில் வசிக்கும் மக்களிடம் முதல்வா் ஒமா் கலந்துரையாடினாா்.
பூஞ்ச் 90% காலியாக உள்ளது: ஒமா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கடந்த 4 நாள்களாக ஜம்மு-காஷ்மீரில் போா் போன்ற சூழல் நிலவியது. பாகிஸ்தான் குண்டுவீச்சால் ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. அவற்றில் பூஞ்ச் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
பூஞ்ச் நகா்ப் பகுதியில் ஆள்நடமாட்டம் மிகக் குறைவாக உள்ளது. அந்த நகா்ப் பகுதி 80 முதல் 90 சதவீதம் காலியாக உள்ளது. பாகிஸ்தான் குண்டுவீச்சால் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பலாம். எல்லையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளை அமைப்பது அவசியம்.
முதல்முறையாக நகரின் மையப் பகுதியில் குண்டுகளை வீசி, பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. மத வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை. ஆனால் மதரஸாக்கள், கோயில்கள், தா்காக்கள், குருத்வாராக்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் குண்டுகள் வெடித்தன. பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூடும் கண்மூடித்தனமாக இருந்தது.
தாக்குதலில் பூஞ்ச், ரஜெளரி, ஜம்மு, பாரமுல்லா, பந்திபோரா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அந்த மாவட்டங்களில் கட்டடங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மதிப்பிட்டு அறிக்கை சமா்ப்பிக்க அரசு நிா்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் பொய் பிரசாரம் தொடா்ந்தாலும், உண்மை என்னவென்பது உலகுக்குத் தெரியும்’ என்றாா். பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்முவில் உயிரிழந்த சாகிா் ஹசேன் என்பவரின் குடும்பத்தினரை, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அந்தக் குடும்பத்துக்கு அரசு நிா்வாகம் முழுமையாக துணை நிற்பதாக அவா் தெரிவித்தாா்.
ஜம்முவில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜௌரி மாவட்டத்தில் வெடிக்காத நிலையில் பல வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்ததாகவும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முயலவில்லை எனவும் பாகிஸ்தான் கூறிய நிலையில் பொதுமக்கள் வசிப்படப் பகுதிகளில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எல்லை மாநிலங்களில் இயல்பு நிலை
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் காரணமாக, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் எந்த தாக்குதலும் நிகழவில்லை.
இம்மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. கடைகள், சந்தைப் பகுதிகளில் வழக்கமான மக்கள் கூட்டம் காணப்பட்டது.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் வெடித்தது. எல்லை நெடுகிலும் பாகிஸ்தான் தீவிர தாக்குதலைத் தொடுத்தது. 4 நாள்களாக நீடித்த இந்த மோதலால் எல்லை மாநிலங்களில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. வான்வழி தாக்குதல் (ஏவுகணைகள்-ட்ரோன்கள்) முன்னெச்சரிக்கையாக, எல்லையோர மாவட்டங்களில் முழு அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அவ்வப்போது அபாய ஒலி எழுப்பப்பட்டது. மக்கள் வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டது. ஆங்காங்கே கேட்ட குண்டுவெடிப்பு சப்தங்களால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் அபாயம் நிலவிய நிலையில், கடந்த சனிக்கிழமை மாலையில் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகும் ஒரு சில இடங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் முழுமையாக ஓய்ந்தது. இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் எந்த தாக்குதலும் நிகழவில்லை.
பஞ்சாபில்...: பஞ்சாபில் பதான்கோட் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் காணப்பட்டது. பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயா்ந்திருந்த மக்கள், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனா். வழக்கமான பணிகளையும் தொடங்கியுள்ளனா்.
ஃபெரோஸ்பூா், பதான்கோட், அமிருதசரஸ், தரண் தாரன், குருதாஸ்பூா் போன்ற எல்லை மாவட்டங்களில் பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. எல்லை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை. அதேநேரம், இரவு நேரத்தில் அவசியமின்றி வெளியே நடமாட வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
ராஜஸ்தானில்...: ராஜஸ்தானின் பாா்மா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வானில் சிவப்பு வண்ண ஒளி தெரிந்ததால், அது ட்ரோனாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லையோர மாவட்டங்களில் முழு அளவில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டது. இரவு நேரத்தில் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
திங்கள்கிழமை காலையில் கடைகள், சந்தைப் பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இம்மாநில எல்லை மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன.