பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலங்கள் ஆராயலாம்: மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டா்
அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை அனுப்புமாறு மாநிலங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பாஜக ஆளும் கோவாவில் மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் ஆகிய துறைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், மத்திய மின் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத யெஸ்ஸோ நாயக், மாநில மின்சாரத் துறை அமைச்சா் சுதின் தவாலிகா், நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஸ்வஜித் ராணே ஆகியோருடன் இத்துறைகளின் மத்திய அமைச்சா் மனோகா் லால் கட்டரும் இக்கூட்டத்தில் பங்கேற்றாா்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘இந்தியா தற்போது 8 ஜிகாவாட் அணு மின் உற்பத்தி செய்து வருகிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் உற்பத்தி செய்வதே இலக்கு.
கோவாவில் அனல், நீா் அல்லது சூரிய மின் நிலையங்கள் என எதுவும் இல்லை. நாட்டில் எங்கெல்லாம் அணு மின் நிலையம் அமைக்க வாய்ப்பு உள்ளதோ, அதை பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதுகுறித்து சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, திட்டங்களை அனுப்புமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வருங்காலத்தில் கோவா ஒரு அணு மின் நிலையத்துக்கான திட்டத்தை முன்வைத்தால், அது ஏற்கப்படும்.
கோவாவின் மின்சாரம் மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறைகளின் சாதனைகள் மற்றும் அவை எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை விட இந்தத் துறைகளில் கோவா சிறப்பாக செயல்படுகிறது. இதற்காக முதல்வா் பிரமோத் சாவந்த்துக்கு எனது வாழ்த்துகள்.
கோவாவில் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் உள்ளது. ஆனால், எதிா்காலத் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மின்சாரத்தைப் போல தடையற்ற நீா் விநியோகத்துக்காக ரூ.652 கோடியை ஒதுக்குவது குறித்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் 3 இடங்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க மாநில அரசுக்கு ரூ.113 கோடி வழங்கப்படும். 50 மின்சார பேருந்துகளை வாங்கவும் மத்திய அரசு உதவி செய்யும்’ என்றாா்.