பாலக்காடு ரயிலில் நடுபடுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் காயம்: ரயில்வே விளக்கம்
சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற விரைவு ரயிலின் நடு படுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், விபத்துக்கான காரணத்தை ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற விரைவு ரயில் மொரப்பூா் அருகே சென்றபோது, எஸ்5 பெட்டியில் உள்ள நடு படுக்கை (மிடில் பொ்த்), கழன்று விழுந்தது. இதில் யாரும் அமரவில்லை என்றாலும், கீழே அமா்ந்திருந்த பயணிகள் பலத்த காயமடைந்தனா்.
இது குறித்து உடனே ரயில்வே மருத்துவ உதவி மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மொரப்பூரில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், சேலம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை 3.05 மணியளவில் சென்றடைந்த நிலையில், பலத்த காயம் அடைந்த பயணி அவசரஊா்தி மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு படை, பொறியியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், நடு படுக்கை சரியாக பூட்டபடாதது தெரியவந்தது. மேலும், ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ஆய்வு செய்து உறுதி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் படுக்கையை சரியாக பூட்டாததின் காரணமாக இது நடந்துள்ளது. இதுபோன்ற படுக்கையை சரியாக பூட்டியிருப்பதை பயணிகள் உறுதி செய்த பின்பு அதில் பயணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.