Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லிய...
ஜம்மு-காஷ்மீா், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்: குடிமக்களுக்கு சிங்கப்பூா், இஸ்ரேல் அறிவுரை
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூா் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பதிலளிக்க ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லைப் பகுதியில் (எல்ஓசி) மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிா்க்குமாறு இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூா் நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் தங்களின் குடிமக்களுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலவுவதால் பாகிஸ்தானுக்கு செல்லும் மற்றும் பாகிஸ்தானில் இருந்து புறப்படும் 50-க்கும் மேற்பட்ட சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா எச்சரிக்கை:
லாகூா் உள்ளிட்ட பாகிஸ்தான் முக்கிய நகரங்களில் இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியிருப்பதால் அமெரிக்கா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் எச்சரித்துள்ளது.
தீவிர மோதல் நடைபெறும் இடங்களிலிருந்து அமெரிக்கா்கள் உடனடியாக வெளியேற வேண்டும். வெளியேற முடியாத சூழலில், பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.