'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம்...
ஜம்முவில் தீவிரவாதிகள் - பாதுகாப்புப் படையினருக்கு மீண்டும் துப்பாக்கிச் சூடு!
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படை வீரர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த நான்கு நாள்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் இன்று (மார்ச் 27) காலை சூஃபியான் வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஹிராநகர் பகுதியைச் சேர்ந்த சன்யல் கிராமத்தில் கடந்த மார்ச் 23 அன்று தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் நடவடிக்கையைத் துவங்கினர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் முதல்முறையாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
பின்னர், தீவிரவாதிகளைக் கண்டறிய வீரர்களின் உத்தேச துப்பாக்கிச் சூடுகளுக்கு எந்தவொரு பதில் தாக்குதலும் வராததினால் தேடுதல் நடவடிக்கையானது விரிவடைந்தது.
மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையில் இந்திய ராணுவம், தேசிய பாதுகாப்புப் படை, எல்லை பாதுகாப்புப் படை, ஜம்மு காவல் துறை, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஆகிய படைகள் இணைந்து ஹெலிகாப்டர், டிரோன், துப்பாக்கிக் குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் மோப்ப நாய்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 25 அன்று ராணுவ சீருடையில் இருந்த நபர்கள் தன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு சம்பா - கதுவா பகுதியிலுள்ள ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நபர்களிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த மார்ச் 25 அன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 2 கையெறி குண்டுகள் மற்றும் மிகப் பெரியளவிலான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ராணுவ நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினருடன் அப்பகுதிவாசிகளும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும், சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தி, தீவிரவாதிகளின் நடமாட்டம் ஏதேனும் உணரப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்குமாறு பாதுகாப்புப் படை வீரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் 5 அன்று மர்ஹூன் கிராமத்தில் உறவினரின் திருமணத்துக்கு சென்று திரும்பிய தர்ஷன் சிங் (வயது 40), யோகேஷ் சிங் (32) மற்றும் வருண் சிங் (14) ஆகியோர் மாயமாகிய நிலையில் ராணுவம் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் மார்ச் 8 அன்று அங்குள்ள வனப்பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியின் அருகே மூவரின் சடலமும் மீட்கப்பட்டன.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திரா சிங் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், கதுவாவில் தீவிரவாதிகளினால் மூன்று உறவினர்கள் கொல்லப்பட்டது மிகுந்த வருத்தமளிப்பதாகப் பதிவிட்டிருந்தார்.
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள கதுவா மாவட்டத்தின் வழியாக கடந்த காலங்களில் தீவிரவாதிகள் இந்தியாவினுள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.