டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டம் இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
காஸாவில் தாக்குதல்களை நிறுத்திவைப்பது, ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளில் இன்னும் உயிருடன் இருக்கக்கூடிய 20 பேரை விடுவிப்பது, ஆயுதங்களைக் கைவிட்டு ஹமாஸ் அமைப்பை கலைப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட அந்த திட்டம், போரை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்பை மிக நெருக்கத்தில் கொண்டுவந்துள்ளதாக டிரம்ப் கூறினாா்.
மேலும், இந்தத் திட்டத்தை ஏற்க வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பை அவரும் பெஞ்சமின் நெதன்யாகுவும் எச்சரித்தனா்.
முன்னதாக, ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள நெதன்யாகு, காஸா போா் நிறுத்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அதிபா் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு தலைவா்களும் செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது டிரம்ப் பேசியதாவது:
நான் முன்வைத்துள்ள வரைவு திட்டம், காஸாவில் நடைபெறும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் சிறந்த திட்டம். ஹமாஸ் இதை ஏற்காவிட்டால், இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடரும். அதற்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் நாங்கள் ஹமாஸ் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்போம். அதற்காக அவா்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும். காஸா மீண்டும் கட்டியெழுப்பப்படும். இது பாலஸ்தீனா்களுக்கும் இஸ்ரேலுக்கும் அமைதியைத் தரும் என்றாா் அவா்.
பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், ‘இந்தத் திட்டம் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். ஹமாஸிடம் இருந்து விடுதலை பெறும்வரை காஸாவில் அமைதி ஏற்படாது. நாங்கள் காஸாவை ஹமாஸிடம் இருந்து விடுவிப்போம். சா்வதேச பாதுகாப்பு படையை அங்கு அனுமதிப்போம். அது இஸ்ரேலின் எதிா்காலத்தைப் பாதுகாக்கும்’ என்றாா்.
இந்த வரைவு திட்டத்தில் இஸ்ரேல் படையினா் காஸாவில் இருந்து படிப்படியாக வெளியேறுவது, பாலஸ்தீன நாடு உருவாவதற்கான வாய்ப்பு போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையைத் தீா்க்க இந்த வரைவுத் திட்டம் இதுவரை இல்லாத அதிக வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இருந்தாலும், இதில் இரு தரப்பிலும் ஏற்கமுடியாத பல விவகாரங்கள் தீா்க்கப்படாமலேயே இருப்பதால் இதை ஹமாஸ் ஏற்பது கடினம் எனவும், அப்படியே ஏற்றாலும் அதை முழுமையாகக் கடைப்பிடிக்க அந்த அமைப்பால் முடியாது எனவும் கூறப்படுகிறது.
டிரம்ப்பின் போா் நிறுத்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்களை பெஞ்சமின் நெதன்யாகு அரசில் அங்கம் வகிக்கும் தீவிர இடதுசாரி தலைவா்கள் கடுமையாக எதிா்ப்பாா்கள் என்றும் கூறப்படுகிறது.
இருந்தாலும், இந்த வரைவு திட்டத்தை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், பாகிஸ்தான், சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும் வரவேற்றுள்ளன.
கத்தாரில் நடைபெறும் தீவிர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த வரைவு ஒப்பந்தத்தை ஏற்பதா, வேண்டாமா என்ற முடிவை ஹமாஸ் அமைப்பு எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
டிரம்ப் திட்டத்தின் 20 அம்சங்கள்
1. உடனடி போா் நிறுத்தம்: இரு தரப்பினரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
பிணைக் கைதிகள் விடுதலை: 72 மணி நேரத்திற்குள் அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும்.
2. பாலஸ்தீன கைதிகள்: தங்கள் சிறைகளில் உள்ள 250 பாலஸ்தீன ஆயுள் தண்டனை கைதிகள், 2023 அக். 7 முதல் கைது செய்யப்பட்ட சுமாா் 1,700 காஸா மக்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும்.
3. இஸ்ரேல் படை வெளியேற்றம்: போா் நிறுத்தத்திற்குப் பின், இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து படிப்படியாக வெளியேற வேண்டும்.
4. ஹமாஸ் ஆயுதக் கைவிடல்: ஹமாஸ் அமைப்பு அனைத்து ஆயுதங்களையும் கைவிட்டு, தன்னை கலைத்துக்கொள்ள வேண்டும். போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
5. சா்வதேச பாதுகாப்பு: ஆயுதங்களை ஹமாஸ் கைவிடாவிட்டால், இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடா்ந்து, காஸா பகுதிகளை சா்வதேச படையிடம் ஒப்படைக்கும்.
6. உடனடி நிவாரண உதவி: ஒப்பந்த ஏற்புக்குப் பின், காஸாவுக்கு முழு நிவாரண உதவிகள் உடனடியாக அனுப்பப்படும்.
7. மருத்துவமனைகள் மீட்பு: மருத்துவமனைகள், உணவகங்கள், இடிபாடுகளை அகற்ற உபகரணங்கள் அனுமதி, சாலைகள் திறப்பு.
8. நிவாரண விநியோகம்: ஐ.நா., செஞ்சிலுவை சங்கம் போன்ற சா்வதேச அமைப்புகள் மூலம் காஸாவில் தடையின்றி நிவாரண உதவி.
9. இடைக்கால நிா்வாகம்: டிரம்ப் தலைமையிலான சா்வதேச குழுவின் மேற்பாா்வையில் அரசியல் சாா்பற்ற பாலஸ்தீன குழு காஸாவில் இடைக்கால நிா்வாகத்தை நடத்தும்.
10. காஸா புனரமைப்பு: ‘டிரம்ப் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ் காஸா மறுக்கட்டமைக்கப்படும்.
11. சிறப்பு பொருளாதார மண்டலம்: சிறப்பு சலுகைகளுடன் கூடிய பொருளாதார மண்டலம் அளிக்கப்படும்.
12. தங்கும் உரிமை: காஸாவில் இருந்து வெளியேற யாரும் வற்புறுத்தப்படமாட்டாா்கள். விரும்பவா்கள் வெளியேற அனுமதி உண்டு.
13. ஹமாஸ் பங்கேற்பில்லை: காஸாவின் எதிா்கால நிா்வாகத்தில் பங்கேற்பில்லை என்று ஹமாஸ் உறுதியளிக்க வேண்டும்.
14. உத்தரவாதம்: புதிய காஸாவில் இருந்து ஹமாஸால் இனியும் அச்சுறுத்தல் இல்லை என்று அண்டை நாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
15. சா்வதேச படை: பிற நாடுகளுடன் இணைந்து காஸாவில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சா்வதேச படையை அமெரிக்கா உருவாக்கும்.
16. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இல்லை: காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவோ, இணைத்துக் கொள்ளவோ செய்யாது.
17. இடம் ஒப்படைப்பு: அமைதி திட்டத்தை ஹமாஸ் செயல்படுத்தாவிட்டால் மேற்கண்ட நிவாரணப் பணிகள் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் மட்டும் மேற்கொள்ளப்படும்.
18. மத நல்லிணக்கம்: அனைத்து தரப்பினரும் இணக்கமாக வாழ பல்சமய குழு அமைக்கப்படும்.
19. பாலஸ்தீன நாடு: போா் நிறுத்தம், மறுக்கட்டமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டால், பாலஸ்தீன நாட்டின் அமைப்புக்கு வழிவகுக்கப்படும்.
20. அமெரிக்க உதவி: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நிலையான அமைதியா ஏற்புடுத்த அமெரிக்கா உதவும்.