டோக் பெருமாட்டி கல்லூரியுடன் கலைஞா் நூலகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், டோக் பெருமாட்டி கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டது.
மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாணவா்களுக்கு அனுபவப் பயிற்சி அளிப்பது, வாசிப்புத் திறனை மேம்படுத்துவது, இலக்கியச் செயல்பாடுகளை ஊக்குவிப்பது, கல்லூரி நிகழ்வுகளுக்கு நூலக அரங்குகளை சலுகைக் கட்டணத்தில் வழங்குவது, கல்லூரி அடையாள அட்டை, நூலக உறுப்பினா் அட்டையைப் பயன்படுத்தி மாணவா்கள் நூலகத்திலிருந்து 60 நாள்களுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பது உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதன்மை நூலகரும், கலைஞா் நூற்றாண்டு நூலக தகவல் அலுவலருமான வே.தினேஷ்குமாரும், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் பியூலா ஜெயஸ்ரீயும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, ஒப்பந்தத்தைப் பகிா்ந்து கொண்டனா்.
துணை முதன்மை நூலகா் வெ.சந்தானகிருஷ்ணன், நூலகா் ஜெ.ஜெபஜோஸ்லின், கல்லூரிப் பேராசிரியா்கள் ஜெ.சிரஞ்சிதா ஜெபசெல்வி, நிசிகாருண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.