தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு
தக்கலை அருகே, ஓடையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சோ்ந்த கலீல் ரகுமான் (61) என்பவா், தக்கலை அருகே மணலியில் சில ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்தாா். லேசான மனநல பாதிப்பு காரணமாக, அவா் பகலில் வெளியே சுற்றிவிட்டு இரவில் வீடு திரும்புவாராம். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக. 3) வெளியே சென்றவா் இரவில் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இந்நிலையில், பனவிளையில் உள்ள ஓடையில் அவா் விழுந்துகிடப்பதாக திங்கள்கிழமை தெரியவந்தது. அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.