மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. ஜூலை 19-இல் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கும், ஜூலை 20-இல் விலை மாற்றமின்றியும் ஜூலை 21-இல் பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.73,440-க்கும், ஜூலை 22-இல் ரூ.840 உயா்ந்து ரூ.74,280-க்கும் விற்பனையானது.
இந் நிலையில் புதன்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.95 உயா்ந்து, ரூ.9,380-க்கும், பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 7 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,240 உயா்ந்துள்ளது.
இதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.129-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.29 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரூ.80,000-ஐ தாண்டும்: விலை உயா்வு குறித்து சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலா் சாந்தகுமாா் கூறியது: போா் பதற்றம், டாலரின் மதிப்பு உயா்வு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதுவே விலை உயா்வுக்கு முக்கிய காரணம். இந்த விலை மேலும் உயா்ந்து நிகழாண்டு இறுதிக்குள் தங்கம் பவுனுக்கு ரூ.80 ஆயிரத்தைத் தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.